பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!


குண்டு வெடிப்பு

கேரளாவின் கண்ணூரில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டு வெடிப்பு

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி திடீரென பட்டப்பகலில் குண்டு வெடித்தது. இதில் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்குப் பின் தீவிரவாத கும்பல் இருப்பதாக என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.

இதுதொடர்பாக பலரை கைது செய்து அது விசாரணை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் குண்டு வைத்த குற்றவாளியை என்ஏஐ தேடி வருகிறது.

குண்டு வெடிப்பு

இந்த நிலையில், கேரளா மாநிலம், கண்ணூரில் இன்று அதிகாலை குண்டு வெடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூரில் பனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முளியத்தோட்டில் வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பனூர் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஷெரின்(26), வினீஷ்(24)என்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட ஒருவரின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நடந்துள்ளதாக கூறிய போலீஸார், வெடிகுண்டு தயாரிப்பின் போது அவர்கள் காயமடைந்தார்களா, வெடித்தது என்ன வகை குண்டு என தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர். இந்த சம்பவம் கண்ணூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x