மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நகர்மன்றத் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமை வகித்தார். ஆணையர் அமுதா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக பேசும்போது, திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, அதிமுக கவுன்சிலர் ஒருவர் அங்கிருந்த டம்ளரை எடுத்து, தலைவரை நோக்கி வீசினார். இதனால், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இனிவரும் 2 கூட்டத் தொடர்களில் பங்கேற்க 9 அதிமுக கவுன்சிலர்களுக்கும் தடை விதித்து நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்மன்ற தலைவர், ஆணையர், போலீஸார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நகர்மன்றம் சார்பில் ஆணையர் அமுதா, மேட்டுப்பாளையம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டுதல்,பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மீது மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.