தேனி தம்பதி கொலை வழக்கில் 5 பேர் கைது - சிக்கியது எப்படி?


தம்பதி கொலை வழக்கில் கைதான நபர்கள்.

தருமபுரி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்டு தருமபுரி அருகே உடல்கள் வீசப்பட்ட வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரியை அடுத்த வெத்தலக்காரன்பள்ளம் அருகே புதிதாக சிப்காட் வளாகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் கடந்த 24ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண், பெண் உடல்கள் மீட்கப்பட்டன. போலீஸாரின் தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (54), அவரது மனைவி லதா (எ) ஹேமலதா (50) எனத் தெரியவந்தது. மணிகண்டனிடம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் (31) என்பவர் சிறிது காலம் ஓட்டுநராக பணியாற்றியுள்ளார்.

அப்போது, இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதும், பல தொழில்கள் செய்வதன் மூலம் வசதியாக வாழ்கின்றனர் என்பதும் தேவராஜுக்கு தெரிந்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்வின் (21), கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சபரி (35), தருமபுரியைச் சேர்ந்த நந்தகுமார் (27), பிரவின்குமார் (33) ஆகியோருடன் இணைந்து மணிகண்டன்-ஹேமலதா தம்பதியரிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த 22-ம் தேதி தேவராஜ், சபரி, நந்தகுமார், அஷ்வின் உள்ளிட்டோர் மண்கண்டன்-ஹேமலதா தம்பதியை வீட்டுமனை வாங்க இடம் பார்ப்பதாக ஏமாற்றி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். தேனி நாகலாபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்து 12.5 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர், அவர்கள் போலீஸில் புகார் அளித்து விடுவார்கள் என எண்ணி இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

அதன் பிறகு காரில் உடல்களை ஏற்றி வந்து 23ம் தேதி இரவு தருமபுரி அருகே சிப்காட் வளாகப் பகுதியில் வீசிச் சென்றுள்ளனர். பிறகு நகைகளை தருமபுரி மற்றும் தூத்துக்குடியில் விற்பனை செய்துள்ளனர். இவை அனைத்தையும் விசாரணை மூலம் அறிந்த போலீஸார் நேற்று அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

x