சென்னை சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து! கரும்புகையால் மக்கள் பீதி


சென்னை அருகே மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் வெளியேறி வரும் கரும்புகையால் அப்பகுதி முழுவதுமே இருள்சூழ்ந்தது போல் காட்சி அளித்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வடசென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய் கழிவு, கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழிவுகள் படிந்து, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழக அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டது.

இந்த நிலையில், சென்னை எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 276 பீப்பாய்களில் 48.6 டன் எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் தமிழக அரசுடன் தற்போது மும்பையைச் சேர்ந்த ‘சீ கேர் மரைன் சர்வீசஸ்’ என்ற நிறுவனமும் கைகோத்துள்ளது.

இதனிடையே, சென்னையை அடுத்த மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய்க் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தீயணைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!

x