ஹரியாணாவில் ரூ.5 ஆயிரம் பணம் தர மறுத்த தாயை மகன் கொலை செய்தார். பின்னர் சடலத்தை சூட்கேசில் அடைத்து, உத்தரபிரதேசத்துக்கு ரயிலில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியாணா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹிமான்ஷூ. இவர் கடந்த 13ம் தேதி அன்று தனது தாய் பிரதீமா தேவியிடம் (42) ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால், தாய்க்கும் மகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஹிமான்ஷூ, தனது தாயை தாக்கி, கழுத்தை நெரித்தார். இதில் பிரதீமா மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
அன்றைய தினம் மாலையே, பிரதீமா தேவியின் சடலத்தை சூட்கேசில் வைத்து அடைத்து, ஹிசாரிலிருந்து, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் சடலத்தை வீசுவதற்கு எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் திரிவேணி சங்கமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் ஹிமான்ஷூ, சூட்கேஸுடன் சுற்றிக் கொண்டிருந்ததை தாராகஞ்ச் போலீஸார் கண்டனர்.
இதையடுத்து ஹிமான்ஸூவை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோதுதான் மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
இதையடுத்து, பிரதீமாவின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஹூமான்ஸூவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஹரியாணா காவல் துறைக்கும், ஹிசாரி்ல் உள்ள ஹிமான்ஸூவின் தந்தை மற்றும் சகோதரிக்கும் உத்தரபிரதேச போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மகன் தாயை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து ரயிலில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!