கருகலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மயக்கவியல் மருத்துவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் சரண் (பெயர் மாற்றம்). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிகா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது 50 நாட்கள் கருவுற்றுள்ள பூமிகா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கருவை கலைக்க முடிவு செய்துள்ளார். பின்னர் தனது கணவருடன் வீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு குறித்து கேட்டபோது அங்கிருந்த பெண் மருத்துவர் அருகிலுள்ள ADDAM மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து கடந்த 12ம் தேதி பூமிகா பெண் மருத்துவர் கூறிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கருக்கலைப்பு சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை முடிந்து நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்ற பூமிகா தனது கணவரிடம் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவர் இளங்குமரன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் உடனே இது தொடர்பாக வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி மயக்கவியல் மருத்துவர் இளங்குமரன் மீது பெண் வன்கொடுமை, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் இளங்குமரனிடம் விசாரணை நடத்திய போலீஸார் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.