ஆம்னி பேருந்து- லாரி மோதி விபத்து: 2 ஓட்டுநர்களும் உயிரிழப்பு! உயிர் தப்பிய பயணிகள்


உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளில் எண்ணிக்கை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. வரைமுறை இன்றி ஆம்னி பேருந்துகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. மூட்டைப் பூச்சிகளைப் போல இரவு நேரங்களில் அவை சாலைகளில் அதிகம் சென்று கொண்டிருக்கின்றன. ஆம்னி பேருந்துகளில் அதிக முன் அனுபவம் கொண்ட ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பல இடங்களில் ஆம்னி பேருந்துகள் அதிகம் விபத்துக்கு உள்ளாகி வருவது தொடர்கதையாகியுள்ளது. அந்த வகையில் இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

நேற்றிரவு சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து அதிவேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.

அதனால் தடுப்புகளை உடைத்துக் கொண்டு நான்கு வழி சாலையில் பேருந்து எதிர் திசையை நோக்கி சென்றது. அப்போது எதிர் திசையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி மீது ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி பேருந்து அப்பளமாக நொறுங்கி லாரியினுள் சொருகி நின்றது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர்கள் இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். பேருந்தில் இருந்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த பயங்கர விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவல்துறையினர் பேருந்துகளை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

x