ஐந்து பேரை காவு வாங்கிய ஐயப்ப பக்தர்கள் பேருந்து... ஆட்டோ மீது மோதியதில் மேலும் பலர் படுகாயம்!


பேருந்து மோதியதில் நொறுங்கி கிடக்கும் ஆட்டோ

கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கிழக்கேத்தலாவில் இருந்து நேற்று மாலை ஆறு மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று புல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. செட்டியங்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது அரீகோட்டில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிவந்து ஆட்டோவின் இடிபாடுகளில் இருந்தவர்களை மீட்கத் தொடங்கினர். ஆட்டோவில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர்களில் நான்கு பேர் பலியானார்கள்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜீத், பயணிகள் முஹ்சினா, தஸ்னீமா, தஸ்னீமாவின் மகள் மோலி (7), ரைசா (3) என அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்கள் மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சபீரா, முகமது நிஷாத், ஆஷா பாத்திமா, ரைஹான் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மாஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தில் ஐந்து பேர் பலியாகியிருப்பது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x