புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க வடக்கு பிரிவு எஸ்பி வீரவல்லபன் மேற்பார்வையில் டி.நகர் (கோரிமேடு) போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்டிஎப் இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ், குற்றப்பிரிவு சிறப்பு நிலை சப்இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் செயின் பறிப்பு நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். கடந்த ஒரு மாதமாக டிநகர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் வாகன சோதனையும் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று போலீஸார் லட்சுமி நகர்-மகாத்மா நகர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீஸார் மடக்கினர். ஆனால் அந்த நபர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
உடனே போலீஸார் அவரை விரட்டி சென்று பிடிக்க முற்பட்ட போது, அந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை பிடித்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் ஆந்திராவை சேர்ந்த சந்தோஷ் குமார் (எ) பாபு (36) என்பதும், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தனது நண்பரான ஆந்திராவை சேர்ந்த சையது பாஷாவுடன் இணைந்து முத்தியால்பேட்டை, எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதிகளில் பைக்குகளை திருடி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமார் (எ) பாபுவை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 2 பைக் மற்றும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது சந்தோஷ்குமார் (எ) பாபு கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வடக்கு பகுதி போலீஸ் எஸ்பி.வீரவல்லபன் செய்தியாளர்களிடம் கூறும்போது, புதுச்சேரியில் பல இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் சந்தோஷ்குமார் (எ) பாபு மற்றும் அவரது நண்பர் இருவம் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக இவர்கள் வார இறுதி நாட்களில் ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு வந்து வெவ்வேறு இடங்களில் பைக்குகளை திருடி செயின் பறித்துவிட்டு மீண்டும் ஆந்திரா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியான சையது பாஷா மீது கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் மற்றும் ஹைதராபாத் ஆகிய காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்தார்.
இன்று சந்தோஷ்குமார் (எ)பாபுவை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு செயின் பறிப்பு நபரை கைது செய்த போலீஸாரை சீனியர் எஸ்பி நாரா சைத்னயா பாராட்டினார்.