திருச்சி ஆணையர் உத்தரவை மீறிய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்


திருச்சி: திருச்சியில் நிலப்பத்திரம் காணாமல் போனது தொடர்பாக போலீஸார் கண்டறிய முடியாத (நான்-டிரேஸபள்) சான்றிதழ் வழங்குவர். இதுபோன்ற நான்-டிரேஸபள் சான்றிதழ்களை பெற்று, பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏராளமான போலிப்பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி, போலீஸார் இதுபோன்ற நிலப்பத்திரங்கள், கல்வி உள்ளிட்ட சான்றிதழ்கள் தொடர்பாக நான்-டிரேஸபள் சான்றுகள் வழங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். உரிய விசாரணையின்றி சான்றுகள் வழங்கக்கூடாது என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், கடந்த ஒரு மாதத்துக்கு முன் நிலப்பத்திரம் காணமால் போனது தொடர்பாக நான்-டிரேஸபள் சான்றிதழ் வழங்கி உள்ளார். மேலும், பணம் வாங்கிக் கொண்டு, இன்ஸ்பெக்டருக்கு பதிலாக அவர் கையெழுத்திட்டு இது போன்று சான்றிதழ்களை அவர் வழங்கி வருவதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினிக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து, விசாரணை நடத்திய ஆணையர் என்.காமினி, உத்தரவை மீறி செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து அண்மையில் உத்தரவிட்டார்.

x