‘ஆபரேஷன் அகழி’ சோதனை: திருச்சியில் 70 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் சிக்கின!


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கட்டப் பஞ்சாயத்து மற்றும் கந்து வட்டி மூலம் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் `ஆபரேஷன் அகழி' என்ற சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையின் தொடர்ச்சியாக, தலைமறைவாக உள்ள சாத்தனூர் அண்ணாமலை தொடர்புடைய அலுவலகம், இவரது பினாமியாக கூறப்படும் சாத்தனூரைச் சேர்ந்த ராஜ்குமார், அண்ணாமலையுடன் கூடா நட்பில் இருந்து வரும் கே.கே.நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தமீனாட்சி ஆகியோரது அலுவலகம் மற்றும் வீடுகளில் தனிப்படையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சாத்தனூர் ராஜ்குமார் வீட்டில் அவருக்கு தொடர்பில்லாத 17 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

மீனாட்சியின் வீட்டில் அவருக்கு தொடர்பில்லாத 10 பத்திரங்கள், 70 பவுன் நகைகள், ரூ.18.92 லட்சம் ரொக்கம் ஆகியவை சிக்கின. இதுகுறித்து வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, வருமான வரித் துறையினர் பணம், நகை மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆபரேஷன் அகழி குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து பலரும் காவல்துறையை தொடர்பு கொண்டு, பல்வேறு புகார்களை அளித்து வருகின்றனர். ஆபரேஷன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக உள்ள அனைவரும் தனிப்படை அமைத்து விரைவில் கைது செய்யப்படுவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் தெரிவித்துள்ளார்.

x