நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா டெல்லி போலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்குள் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்த சிலர், ஸ்ப்ரே அட்டாக் நடத்தியுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் புகைகளை வரும் குப்பிகளை வீசியுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் வழங்கியது தெரிய வந்தது.
நாடாளுமன்றத்தில் இந்த தாக்குதலை நடத்த வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சாகர் சர்மா, மனோரஞ்சன், நீலம், அமோல் ஷிண்டே, விஷால் சர்மா, லலித் ஜா ஆகிய 6 பேரும் ‘பகத் சிங் பேன் கிளப்' என்ற சமூகவலைதளத்தின் மூலம் நண்பர்களாகி உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 6 பேரும் கர்நாடகாவின் மைசூருவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மீண்டும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசித்து உள்ளனர்.
புதிய நாடாளுமன்றத்தின் தொடக்க நாளின்போதே வண்ண புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளராக நுழைய அனுமதி சீட்டு கிடைக்காததால் அன்றைய தினம் தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டது.
கடந்த டிசம்பர் 10-ம் தேதி 6 பேரும் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அன்றைய தினம் சதித்திட்டம் இறுதி செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வண்ண புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகள் இருப்பதால் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒருவருக்கொருவர் தெரியும் என்று கூறினார். வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் அவலநிலை, மணிப்பூர் வன்முறை, தலித்துகள் மீதான வன்கொடுமைகள் போன்ற பல பிரச்சினைகளில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவே இந்தச் செயலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறினர்.
அவர்கள் அனைவரும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 7 நாட்கள் காவலில் வைக்க தேசிய தலைநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா தலைமறைவாக இருந்தார். கடைசியாக அவர் ராஜஸ்தானில் முகாமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லி போலீஸாரிடம் அவரே சரணடைந்துள்ளார். அவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.