விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்ததில் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில் நேற்று மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் இருந்து நேற்று காலை 8:10 மணிக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் மினி பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிப் புறப்பட்டது.

இந்திரா நகரைச் சேர்ந்த மித்திஸ் மைக்கேல்ராஜ்(45) என்பவர் பேருந்தை ஓட்டினார். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயணித்தனர். புறப்பட்ட 5 நிமிடங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் பேருந்தின் உள்ளே சிக்கிக்கொண்ட பயணிகள், வெளியேற முடியாமல் அலறினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போலீஸார் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் நிதிஷ்குமார்(17), ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு பயிலும் சதீஷ்குமார்(20), 10-ம் வகுப்பு மாணவர் வாசுராஜ்(15), தனியார் பல்கலைக்கழக ஊழியர் மாடசாமி(28) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த மாடசாமி, சதீஷ்குமார், நிதிஷ்குமார், வாசுராஜ்.

மேலும், காயமடைந்த 32 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவர் மேல்சிகிச்சைக்காக மதுரை மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்து நேரிட்ட இடத்தை எஸ்.பி. கண்ணன், சார் ஆட்சியர் பிரியா ஆகியோர் பார்வையிட்டனர்.

விபத்து குறித்து மம்சாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து,ஓட்டுநர் மித்திஸ் மைக்கேல்ராஜுவைக் கைது செய்தனர். குறுகலான சாலையில் வேகமாகவும், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதும் விபத்து ஏற்படக் காரணமாக இருந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சாலை மறியல்: இதற்கிடையில், விபத்து நேரிட்ட சாலையை சீரமைத்து, அகலப்படுத்த வலியுறுத்தி சம்பவ இடத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அவர்களது உறவினர்கள் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உழவர் சந்தை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவிப்பதுடன், தலாரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

x