இணையத்தில் பழகி பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிந்த வேலூர் இளைஞர் கைது


புதுச்சேரி: இணையதளம் மூலம் பழகி பின்னர் பெண்களை ஆடையின்றி விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வேலூரைச் சேர்ந்த இளைஞரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2022-ல் இருந்து பல பெண்களிடம் பணம் பறித்தது வங்கி கணக்கின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த திருமணமான பெண் சமூக வலைதளக் குழுவில் இணைந்து தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அக்குழுவிலிருந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா குடிசை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (29) பழகியுள்ளார். சகோதரி என அழைத்துப் பழகிய சுரேஷ்குமார் நாளடைவில் பெண்ணிடம் குடும்ப விஷயங்களை பேசி காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

அதனையடுத்து அப்பெண் ஆடையின்றி சுரேஷ்குமாருடன் விடியோ அழைப்பில் பேசியுள்ளார். அதனை சுரேஷ்குமார் பதிவு செய்துள்ளார். அதன்பின் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அதனால் அப்பெண் ரூ.6 ஆயிரம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து சுரேஷ்குமார் மிரட்டியதை அடுத்து பெண் புதுச்சேரி சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

அதன்படி போலீஸார் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து கைபேசியை பறிமுதல் செய்து சோதனையிட்டதில் பல பெண்களை ஏமாற்றி விடியோ பதிவு செய்து அவர் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2022ல் இருந்து ஆடையின்றி பெண்களை விடியோ காலில் பேசி பதிவு செய்து பணம் பறித்துள்ளது. அவரது வங்கி கணக்கை ஆராய்ந்ததில் தெரிந்துள்ளது.

அத்துடன் இதுபோல ஏமாற்றி பெண்கள் அளித்த புகாரின் பேரில் தேனி, திருத்ச்சியில் 2 வழக்குகளும் சுரேஷ்குமார் மீது பதியப்பட்டது தெரிய வந்தது. அதனையடுத்து சுரேஷ்குமார் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

x