தஞ்சை அதிர்ச்சி... புகார் கொடுக்கச் சென்ற விவசாயி வழிமறித்து அடித்துக்கொலை!


உயிரிழந்த விவசாயி ஜெயக்குமார்

காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்று கொண்டிருந்த விவசாயியை மர்ம கும்பல் சாலையின் நடுவே வழிமறித்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆலிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (50). விவசாயியான இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இவரது உறவினரான அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு வாரத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஜெயக்குமார், உள்ளிட்ட மூவர் சென்ற காரை வழிமறித்து தாக்கும் மர்ம கும்பல்

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி செந்தில், ஜெயக்குமார் மற்றும் காட்டுக்குறிச்சியை சேர்ந்த பிரவீன் (28) ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் கொடுப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். அங்கு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யுமாறு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து மீண்டும் அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு காரில் மூவரும் சென்று கொண்டிருந்தனர்.

ஜெயக்குமார், உள்ளிட்ட மூவர் சென்ற காரை வழிமறித்து தாக்கும் மர்ம கும்பல்

அப்போது பசுபதிகோவில் அருகே சிலர் அவர்களது காரை வழிமறித்து நிறுத்தி மூவரையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாரும், பிரவீனும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிர் இழந்தார். பிரவீன் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது அய்யம்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் புகார் அளித்த போதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு இருக்கும் என ஜெயக்குமாரின் உறவினர்களும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x