செல்போனில் ஆபாச படம் காட்டி தனி அறையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட்!


ஆசிரியர் மகேஸ்வரன்

விழுப்புரம் மாவட்ட திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன்(40) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன் என்பவர் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் திருவக்கரை பள்ளியிலிருந்து 9-ம் வகுப்பு மாணவிகள் இருவரை தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் விழுப்புரத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆசிரியர் மகேஸ்வரன்

இந்நிலையில், மாணவிகளை விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்ற மகேஸ்வரன், அவர்களிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், பள்ளியில் நுழைந்து மகேஸ்வரனை தர்ம அடி கொடுத்து அழைத்து வந்து வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், மகேஸ்வரனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டார். அவரை நிரந்தமாக நீக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x