தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வேலூர் ரவுடி வசூர் ராஜா கைது!


வேலூர்: வேலூரில் கட்டிடம் இடிக்கும் தொழில் செய்துவந்தவரை ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ரவுடி வசூர் ராஜாவை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் சுதந்திர பொன் விழா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வந்தார். ரூ.30 லட்சம் பணம் கேட்டு ரவுடி வசூர் ராஜாவின் கும்பலால் தங்கராஜ் மிரட்டப்பட்டார். இதனால், கடந்த 19-ம் தேதி வீட்டின் அருகேயுள்ள முனீஸ்வரன் கோயில் அருகே இருந்த மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வசூர் ராஜாவின் கும்பல் மிரட்டியதாலேயே தங்கராஜ் தற்கொலை செய்துகொண்டதால் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி அவரது உறவினர்கள் சத்துவாச்சாரி காவல் நிலையத்தை கடந்த 20-ம் தேதி முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, பணம் பறிக்கும் நோக்குடன் மிரட்டி, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பிரபல பெண் மருத்துவரின் பழைய வீட்டை தங்கராஜ் இடித்து அகற்றியபோது அந்த வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ.10 கோடி பணத்தை அவர் எடு்த்துச்சென்றதாக ரவுடி வசூர் ராஜாவின் கும்பல் நம்பியுள்ளது. இதையடுத்து, அந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை கொடுக்குமாறு தங்கராஜை அடித்து மிரட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த தங்கராஜ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய விக்ரம், நரேஷ், அருண்குமார், இம்தியாஸ், திலீப், யோகேஷ் உள்ளிட்ட 6 பேரை டிஎஸ்பி (பொறுப்பு) திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கில் கோவை மத்திய சிறையில் இருந்தபடி மிரட்டி பணம் பறிக்க மூளையாக செயல்பட்ட ரவுடி வசூர் ராஜாவை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடு்த்தனர்.

இதற்கிடையில், வழக்கு ஒன்றுக்காக கோவை மத்திய சிறையில் இருந்து ரவுடி வசூர் ராஜா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த தகவலை அடுத்து தங்கராஜ் தற்கொலை வழக்கில் கைது செய்வதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறையில் ரவுடி வசூர் ராஜாவிடம் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி காவல் துறையினர் அளித்தனர்.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘சத்துவாச்சாரியில் ரவுடி வசூர் ராஜா கடந்த 2015-ம் ஆண்டு வழிப்பறி செய்த வழக்கின் விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு செப். 24-ம் தேதி அளிக்கப்பட இருந்தது. இதற்காக, கோவை மத்திய சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு வசூர் ராஜா மாற்றப்பட்டார். ஆனால், நேற்றுதான் (செப்.26-ம் தேதி) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், வசூர் ராஜா விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக, தங்கராஜ் தற்கொலை வழக்கில் வசூர் ராஜா முக்கிய குற்றவாளி என்பதால் அவரை சத்துவாச்சாரி காவல் அதிகாரிகள் நேற்று பார்மல் அரஸ்ட் (சம்பிரதாய கைது) செய்தனர். இந்த தகவல் வேலூர் நீதிமன்றத்தில் இன்று (செப்.26) சமர்ப்பிக்கப்பட்டது. இனி, நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் அவர் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்படுவார்’’ என்றனர்.

x