பெண் கொடுக்க மறுத்ததால் விழுப்புரம் இளைஞர் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்


விழுப்புரம்: விழுப்புரம் அருகே மோட்சகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் பிரதீப் (27). சென்னைசூளைமேட்டில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் தனது சொந்த கிராமத்தில் உள்ள 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப் குடும்பத்தினர் பெண் வீட்டிற்கு சென்று பெண் கேட்டனர்.

ஆனால் அப்பெண்ணின் பெற்றோர் இதற்கு மறுப்பு தெரிவித்து, வேறொருவருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரதீப் கடந்த 25-ம் தேதி சென்னை சூளைமேட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சூளைமேடு போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதீப் தற்கொலை செய்துகொண்ட தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுவந்தாடு - மடுகரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பிரதீப் தற்கொலைக்கு பெண் வீட்டார் தான் காரணம். எனவே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும் பெண் வீட்டாரின் கடை,வீட்டையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்த நிலையில் வளவனூர் போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பிரதீப் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரேத பரிசோதனை முடிந்து பிரதீப் உடல் வந்தாலும் அவரது உடலை நாங்கள் பெற்று அடக்கம் செய்ய மாட்டோம். பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீஸார் வலுகட்டாயமாக அவர்களை அப்புறப் படுத்தினர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டதாக 15 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் மீது வளவனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x