திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தம்பதி உள்பட 3 பேர் கைது


திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச தம்பதியர் உள்பட 3 பேரை அனுப்பர்பாளையம் போலீஸார் இன்று (செப்.26) கைது செய்தனர்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் வங்கதேசத்தினர் சிலர் தங்கியிருப்பதாக, மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சோதனை செய்தனர். அங்குள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த தன்வீர் அகமது (26), வீரபாண்டியில் தங்கியிருந்த அகமது மம்மூஸ் (25) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். இவர்கள் 2 பேரும், கடந்த 3 ஆண்டுகளுக்கு வங்கதேசத்தில் இருந்து திருப்பூர் வந்ததும், தொடர்ந்து ஈரோடு பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டு கருத்து வேறுபாடு காரணமாக திருப்பூரில் தனித்தனியாக தங்கியிருந்ததும் தெரியவந்தது. தன்வீர் அகமது 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று, தனது மனைவி ஷோஹாகீர் (25) மற்றும் 3 வயது குழந்தையை திருப்பூர் அழைத்து வந்தார்.

உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த தம்பதியரை அனுப்பர்பாளையம் போலீஸார் கைது செய்தனர். இதில் தன்வீர் அகமதுவையும் போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதாவது தன்வீர் அகமது வங்கதேசத்தில் தனது அத்தை கணவரை கொலை செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வங்கதேச நாட்டை சேர்ந்த தம்பதியர் உள்பட 3 பேரை வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர்களுக்கு போலி ஆதார் தயாரித்து கொடுத்த பல்லடம் அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து (42) என்பவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருப்பூரில் வங்கதேசத்தினர் தொடர்ந்து கைது செய்வது, பாராட்டுக்குரியது. திருப்பூர் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி தமிழ்நாட்டுக்கு வருவது வரை பலர் உதவி செய்யாமல் வர முடியாது. இப்படி சட்டவிரோதமாக வருபவர்களால், பெரிய அளவில் பாதுகாப்பிலோ, பொருளாதாரத்திலோ தமிழகத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இணைந்து இவர்களின் பின்புலத்தை தீர ஆராய வேண்டும். தமிழ்நாடு காவல்துறையும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து வங்கதேச ஊடுருவலை முற்றிலுமாக தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

x