புதுச்சேரியில் ரூ.13.65 லட்சம் மோசடி - நைஜீரியாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆண்டு சிறை


புதுச்சேரி: பரிசுப் பொருள்கள் அனுப்புவதாகக் கூறி ரூ.13.65 லட்சம் மோசடி செய்த வழக்கில் நைஜீரியாவைச் சேர்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த பெண், இணையத்தில் தகவல் பரிமாற்றம் செய்துள்ளார். அப்போது, அவருடன் பழகிய 2 மர்ம நபர்கள் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை அவருக்கு அனுப்பியதாகவும், அதை பெற வரி உள்ளிட்டவற்றுக்கான பணத்தை அனுப்பவும் கோரியுள்ளனர். அதை நம்பிய அப்பெண் பல தவணைகளில் ரூ.13.65 லட்சம் வரை அனுப்பியுள்ளார். ஆனால் பரிசுப் பொருள் வந்து சேரவில்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுச்சேரி சைபர் கிரைமில் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தார்.

புதுச்சேரி சைபர் கிரைமில் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது புதுச்சேரி பெண்ணை ஏமாற்றி மோசடி செய்தவர்கள் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஈக்கோ ஓகோ மற்றும் உசெம்மா பேவர் பேட்ரிக் (55) எனத் தெரியவந்தது. அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஈக்கோ ஓகோ தலைமறைவாகிவிட்டார்.

அதனால் பெங்களூருவில் உசெம்மாபேவர் பேட்ரிக்கை மட்டும் புதுச்சேரி போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 3 ஆண்டுகளாக அவர் காலாப்பட்டு சிறையில் உள்ளார். நைஜீரிய நாட்டவரான உசெம்மா பேவர் பேட்ரிக் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில், அரசு தரப்பில் கணேஷ் ஞான சம்பந்தன் ஆஜரானார். விசாரணையின் போது, உசெம்மா பேவர் பேட்ரிக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன்படி விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட உசெம்மா பேவர் பேட்ரிக்குக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். சிறையில் 2021 முதல் இருக்கும் நிலையில், தண்டனையில் பேட்ரிக் சிறையிலிருந்த காலத்தை கழித்து, மீதம் இருக்கும் நாட்களை தண்டனையாக ஏற்றுக்கொள்ள குறிப்பிட்டுள்ளார்.

x