லட்டு வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது காவல்துறையில் தமிழக பாஜக புகார்!


சென்னை: ‘லட்டு பாவங்கள்’ வீடியோவை வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது நடவடிக்க எடுக்கக் கோரி ஆந்திர மாநில காவல்துறையில் தமிழக பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதனை ட்ரோல் செய்யும் விதமாக யூடியூப் பிரபலங்களான கோபி மற்றும் சுதாகர் தங்களுடைய பரிதாபங்கள் சேனலில் “லட்டு பாவங்கள்” என ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ இந்துக்களை புண்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தது.

இதனையடுத்து அந்த வீடியோவை தங்களுடைய சேனலில் இருந்து நீக்கி விளக்கமும் கொடுத்தார்கள் கோபி மற்றும் சுதாகர். ஆனாலும் இந்த வீடியோ வேறு பலராலும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது.

இந்த சூழலில், லட்டு பரிதாபங்கள் வீடியோ இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டதாகக் கூறி பாஜக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி புகார் ஆந்திரப் பிரதேச காவல்துறையிடம் இந்த புகாரை அளித்துள்ளார்.

அந்த புகாரில், ‘சமீபத்தில், கோபி மற்றும் சுதாகர் வைத்துள்ள “பரிதாபங்கள்” என்ற யூடியூப் சேனல் “லட்டு பாவங்கள்” என்ற வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவில், இந்து மத நம்பிக்கையையும் அதன் நடைமுறைகளையும் நேரடியாக அவமதிக்கும் வகையில், பல இழிவான மற்றும் எரிச்சலூட்டும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, “மாட்டிறைச்சி மற்றும் மீன் எண்ணெய்யுடன் திருப்பதி லட்டு மிகவும் சுவையாக இருக்கும்” என்று கூறுவது புண்படுத்துவது மட்டுமல்லாமல், மத முக்கியத்துவத்தையும் குறைக்கிறது

அந்த வீடியோவில் நமது மதிப்பிற்குரிய முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரைக் குறிவைத்து அருவருப்பான வாசகங்களும் கருத்துகளும் உள்ளன. இது அவர்களின் இமேஜையும் நற்பெயரையும் களங்கப்படுத்துகிறது.

மத உணர்வுகளைச் சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட இது போன்ற செயல்களை தடுக்கவும், தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றும் தனிநபர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் விரைவான நடவடிக்கை அவசியம்” என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் வீடியோவை நீக்கி இருந்தாலும், அந்த வீடியோ இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக இருப்பது மட்டும் அல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை வளர்க்க முயற்சி செய்வதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தூண்டும் விதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் கோபி - சுதாகர் மீது வழக்குப் பதிவு செய்யவும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

x