மானாமதுரை அருகே மீண்டும் தண்டவாளத்தில் கழன்று கிடந்த கிளிப்புகள்: ஒருவரை பிடித்து விசாரணை


மானாமதுரை: மானாமதுரை ரயில் நிலையம் அருகே மீண்டும் ரயில் தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது சம்பந்தமாக ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்துக்கு இன்று காலை விருதுநகர் - திருச்சி பயணிகள் ரயில் வந்தது. அந்த ரயில் காலை 8.05 மணிக்கு திருச்சிக்கு புறப்பட தயாரான போது, 100 மீ., தொலைவில் தண்டவாளத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை ரயில்வே ஊழியர்கள் பிடித்து விசாரித்தனர். மேலும், அந்த நபர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே தண்டவாளத்தில் கிளிப்புகள் கழன்று கிடந்துள்ளன. இதையடுத்து, அந்த நபரை ரயில்வே போலீஸாரிடம் ரயில்வே ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி - சூடியூர் இடையே செப்டம்பர் 16ம் தேதி தண்டவாளத்தில் 440 கிளிப்புகள் கழன்று கிடந்தன. இது தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் மானாமதுரை ரயில் நிலையம் அருகிலேயே கிளிப்புகள் கழன்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x