வெளிநாட்டில் வேலைவாய்ப்பு எனக் கூறி ஓசூர் தனியார் ஊழியரிடம் ரூ.8.51 லட்சம் மோசடி


கிருஷ்ணகிரி: வெளிநாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி, ஓசூரைச் சேர்ந்த தனியார் ஊழியரிடம் ரூ.8.51 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஓசூர் திருமலை நகரைச் சேர்ந்தவர் அசோக் (30). தனியார் நிறுவன ஊழியரான இவரது மின்னஞ்சல் முகவரிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வந்தது. அதில், வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், அதில் பதிவு செய்ய இணையதள இணைப்பு அனுப்பப்பட்டிருந்தது. மேலும், இதற்காக முன் பணம் கட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உண்மை என நம்பிய அவர் தனது விவரங்களைக் குறிப்பிட்டு, இணைப்பில் கூறப்பட்டிருந்த வங்கிக் கணக்குகளில் ரூ.8.51 லட்சம் அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அவருக்கு எந்த தகவலும் வரவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அசோக், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

x