ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 2 பேர் கைது


திருப்பூர்: அவிநாசியை சேர்ந்தவர் ராஜேஷ் (49). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தார். இவரது ‘வாட்ஸ் அப்’ எண்ணில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். தனக்கு தெரிந்த செயலியில் முதலீடு செய்தால், அதிக லாபம் பார்க்கலாம் என ராஜேஷிடம் அந்த பெண் கூறினார்.

அந்த பெண் கூறிய செயலியில் தனது வங்கிக் கணக்கில் இருந்து பல தவணைகளாக ரூ.24 லட்சத்தை ராஜேஷ் முதலீடு செய்தார். அந்த பெண் கூறியபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து செயலி குறித்து தனது நண்பர்களிடம் ராஜேஷ் விசாரித்தபோது, அது போலியான செயலி என தெரியவந்தது. கடந்த ஜூலை 31-ம் தேதி திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் ராஜேஷ் புகார் அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவுப்படி, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மல்லிகா தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கு தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டம் பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மைதீன் பாட்ஷா (37), மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அப்துல் காதர்ஜெய்லானி (41) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

x