போலி இணையதளம் உருவாக்கி தொழிலதிபரிடம் பல லட்சம் ரூபாய் நூதன மோசடி


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் அரவிந்த்(52). தொழில் நிறுவன உரிமையாளர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க திட்டமிட்ட இவர், அது தொடர்பான விவரங்களை இணையத்தில் தேடியுள்ளார். அப்போது பங்கு வர்த்தக முதலீடுகள் தொடர்பான தகவல்கள் அவரது வாட்ஸ் அப்-க்கு வந்தது. அதில் எவ்வாறு முதலீடு செய்யலாம், முதலீடு செய்தால் எவ்வளவு தொகை லாபம் கிடைக்கும் என்ற விவரங்கள் இருந்தன.

மேலும், குறிப்பிட்ட முதலீடுகளில் ஓரிரு நாட்களில் அதிக லாபம் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அவர், பல்வேறு பங்கு வர்த்தக வெப்சைட் தளங்களில், பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.71 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தார். ஆனால், கூறியபடி லாபம் கிடைக்கவில்லை. முதலீட்டுத் தொகையையும் பெற முடியவில்லை. அதன் பின்னரே, போலியாக பங்கு வர்த்தகம் தொடர்பான இணையதளம் உருவாக்கி தனது பணத்தை முதலீடு செய்ய வைத்து, மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். சூலூரைச் சேர்ந்தவர் நிதின்குப்தா(36). விமானப்படை அலுவலர். இவரும் வாட்ஸ்அப்-பில் வந்த தகவலை நம்பி ஆன்லைன் தொழிலில், ரூ.39.81 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், லாபம், முதலீட்டுத் தொகை எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x