துபாயில் தொழில் தொடங்குவதாக கூறி கோவை இளைஞரிடம் ரூ.48 லட்சம் மோசடி


கோவை: துபாயில் தொழில் தொடங்குவதாக கூறி, கோவை இளைஞரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வேடபட்டி ஹரிஸ்ரீ கார்டனைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(28). இவர், தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் மார்ஷல் பிரிட்டோ என்பவர் அறிமுகம் ஆனார். இவர், துபாயில் சொந்தமாக ‘பிபிஓ’ அலுவலகம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய பிரவீன்குமார், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளில் ரூ.48 லட்சத்தை திரட்டி மார்ஷல் பிரிட்டோவிடம் கொடுத்துள்ளார். ஆனால், முதலீடு தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லாததால், பிரவீன்குமார் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

ஆனால், மார்ஷல் பிரிட்டோ பணத்தை திருப்பிதரவில்லை. இதுகுறித்து பிரவீன்குமார் ஆர்.எஸ்.புரம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மார்ஷல் பிரிட்டோ மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x