8வது மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை பலி... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோகம்!


மாடி

சென்னையை அடுத்த நாவலூரில் 8-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த மூன்று வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாழம்பூர் காவல் நிலையம்

சென்னை நாவலூரில் ஓஎம்ஆர் சாலை அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிகண்டன், ஜிஜி தம்பதி, 3 வயதான மகன் ஆரவ்வுடன் வசித்து வந்தனர். தம்பதி இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.

குழந்தை ஆரவ்வை அழைத்துக் கொண்டு கீழே வந்த தாய் ஜிஜி விளையாடியுள்ளார். பின்னர், மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய போது தாயும், குழந்தை ஆரவும் லிஃப்டில் சென்றுள்ளனர்.

அப்போது, தாய் ஜிஜி 5 மாடியிலேயே இறங்கிய நிலையில், ஆரவ் இறங்காமல் உள்ளேயே நின்றதால் 8-வது மாடிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு மாடியில் லிஃப்ட் திறந்தவுடன் தாயைக் காணவில்லை என்பதால், அருகில் இருந்த பால்கனி வழியாக குழந்தை ஆரவ் எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக 3 வயது குழந்தையான ஆரவ் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை தாய் ஜிஜி கதறியபடி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழந்தையைப பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சிறுவனின் உடலை கைப்பற்றிய தாழம்பூர் காவல் நிலையத்தினர் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 8-வது மாடியில் இருந்து விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x