புதுச்சேரி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய யூடியூபரின் மகன் கைது


புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபரின் மகனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த சிறுமி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். இதனிடையே அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத புதிய நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

நாளைடைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களை பரிமாறுவது மூலம் நட்பாக பழகி உள்ளனர். அவர்கள் பழகிய 15 நாட்களுக்குள் அந்த நபர் திடீரென சிறுமிக்கு பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அந்த சிறுமயின் ஆபாச வீடியோவையும் அனுப்பி வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார்.

இதனால் செய்வதறியாது தவித்த அந்த இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாய் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நவீன மென்பொருட்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது மதுரை சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தின் ஷா - சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பதும், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் திருச்சி சூர்யா அவருடைய சித்தி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அஷ்ரப் அலியை கைது செய்ய சைபர் கிரைம் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையில், தலைமை காவலர் மணிமொழி, ஐஆர்பிஎன் துணை சப் இன்ஸ்பெக்டர் சுதாகர், காவலர் அரவிந்தன், பெண் காவலர்கள் கமலி, பூவிதா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

மதுரை விரைந்த தனிப்படையினர் அவரை கைது செய்து இன்று புதுச்சேரி அழைத்து வந்தனர். அவரது செல்போனை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு பெண்களுக்கு இதுபோன்று அஷ்ரப் அலி ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அஷ்ரப் அலியை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சைபர் கிரைம் போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகியோரையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர்.

இது பற்றி சைபர் கிரைம் எஸ்பி பாஸ்கரன் மேலும் கூறும்போது, பொதுமக்களுக்கும், இளம்பெண்களுக்கும் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ, உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடமோ தெரியப்படுத் வேண்டும். மேலும் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் எனத் தெரிவித்தார்.

x