பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜரீன் கானுக்கு கொல்கத்தா சீல்டா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கொல்கத்தாவில் கடந்த 2018-ம் ஆண்டு துர்கா பூஜையில் பங்கேற்பதற்காக மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை ஜரீன் கானுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி ஜரீன் கான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
மேலும், பெற்றுக்கொண்ட பணத்தையும் திரும்பித் தரவில்லை. இதையடுத்து ஜரீன்கான், அவரது மேலாளர் ஆகியோர் மீது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொல்கத்தாவின் நர்கேல்தங்கா காவல் நிலையத்தி்ல் புகார் அளித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை ஜரீன் கானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இச்சூழலில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, கொல்கத்தா நீதிமன்றத்தில் ஜரீன்கான் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சீல்டா நீதிமன்றம் ஜரீன்கான், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது, ரூ.30 ஆயிரம் மதிப்புக்கு பிணை பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், வழக்கு விசாரணைக்கு வரும் அனைத்து நாட்களிலும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் வரும் 26-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.