மதுரை: மதுரை மாநகர தனிப்படை காவலர் ஒருவர், தனது மனைவியை அபகரித்ததாக ஆட்டோ ஓட்டுநர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சிவகங்கையைச் சேர்ந்தவர் தயாளன் (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், சில ஆண்டுக்கு முன் மதுரை புதூர் பகுதியிலுள்ள அழகர் நகரில் குடியேறி ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தயாளன் மாநகர காவல் ஆணையர் லோக நாதனிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், "தனது மனைவியை தல்லாகுளம் காவல் நிலையத்தில் தனிப்படையில் பணிபுரியும் காவலர் ஒருவர், அபகரித்துக் கொண்டு, தன்னுடன் வாழவிடாமல் தடுக்கிறார். புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தனது மனைவிக்கு விவகாரத்து கொடுக்க சொல்லி மிரட்டுகின்றனர். இதன் பின்னணியில் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தல்லாகுளம் மகளிர் போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ ஒட்டுநர் தயாளன் கூறியதாவது: "எனது மனைவியை அபகரித்துள்ள காவலர் செல்வராஜ் என்பவர், அழகர் நகரில் வசித்தார். அவரது மனைவி எஸ்ஐயாக உள்ளார். ஒரே பகுதியில் வசித்ததால் அவரது வீட்டு பிள்ளைகளை ஆட்டோவில் அழைத்து செல்வேன். இதன் மூலம் இரு குடும்பத்தினருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே, கடன் வாங்கி சொந்தமாக வீடு ஒன்றை கட்டினேன். அக்கடனை அடைக்கும் நோக்கில் சென்னைக்கு வேலைக்கு சென்றபோது, தனது மனைவி செல்வராஜூனுடன் தவறாக பழகி சேர்ந்து வாழ்வதாக எனது மகன் மூலம் தெரியவந்தது.
அதன் பின் எனக்கும், எனது மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. கடன் வாங்கியவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் தான் வீ்ட்டை விட்டு வெளியேறிய நிலையில், மகன்களை பார்க்க சென்றாலும் என்னை மனைவி அனுமதிப்பதில்லை. இதற்கிடையில் 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கைக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் என்னை மிரட்டினர். எனக்கும், மனைவிக்கும் நடக்கும் வழக்கில் விகாரத்து கொடுத்து விட்டு விலகுமாறு மிரட்டினர்.
மிரட்டலுக்கு பின்னால் காவலர் செல்வராஜ் இருப்பது தெரிந்து கொண்டு காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். எனது மனைவியை அபகரித்துள்ள காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்வேன்" என்று ஆட்டோ ஓட்டுநர் தயாளன் கூறினார்.