ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு...விசாரணைக்குச் சென்றவர் வெட்டிக்கொலை!


ராமஜெயம், பிரபாகரன்

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்பு உடையவர் என சந்தேகிக்கப்படுபவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு

திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ரமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி அன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.

பின்னர் அவரது உடல் கல்லணை சாலையில் உள்ள காவிரிக்கரையோரம் உள்ள முட்புதரில், கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ராமஜெயம்

இக்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் கொலை நடந்து 13 ஆண்டுகளைக் கடந்த பிறகும் இதுவரை ஒருவரை கூட காவல்துறையால் கைது செய்ய முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கடந்த 2012-ம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கும், பின்னர் 2017-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

கொலை

கடந்த 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இந்த வழக்கில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளைப் பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் வள்ளுவன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என் பிரபாகரன் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிர்வாகியாக இருந்த பிரபாகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். திருச்சி அரசு மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தை நடத்தி வந்த பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

திருட்டு வாகனங்களை வாங்கி அடையாளம் தெரியாமல் மாற்றி விற்பதில் வல்லவர் என அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டியதாக ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஆஜராகி பிரபாகரன் கையெழுத்திட்டுள்ளர். பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், இரு சக்கர வாகனங்களில் வந்த 4 முகமூடி நபர்களால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரபாகரனிடம் கடந்த 9-ம் தேதி அன்று ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராமஜெயம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெர்ஷா ரக கார் யாரிடம் இருந்து யாருக்கு விற்கப்பட்டது என்பது தொடர்பாக பிரபாகரனிடம் போலீஸார் இந்த விசாரணையை நடத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக இருந்த நிலையில் பிரபாகரன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x