விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி மகாராஜபுரம் பகுதியில் தனக்கு சொந்தமான 1,600 சதுர அடி காலி மனைக்கு வரி விதிப்பு செய்து தருமாறு, இளங்கோவன் என்பவர் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த விண்ணப்பத்தின் மீது ஆய்வு நடத்தி காலி மனைக்கு வரி விதிப்பு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் தருமாறு நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் விழுப்புரம், வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த குணா (49) என்பவர் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத இளங்கோவன், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் ஆலோசனையின்படி, இன்று ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை பில் கலெக்டர் குணாவிடம் இளங்கோவன் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் குணாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்து அவர் பெற்ற ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி, அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.