கோயில் உண்டியலை திருட முயன்ற தந்தை, மகனை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த கிராம மக்கள்: தஞ்சையில் பரபரப்பு


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற தந்தை – மகனை கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில், அண்மைக் காலமாக விவசாய பயன்பாட்டிற்கான பம்பு செட்டுகளில் உள்ள காப்பர் மின் வயர்கள், மோட்டர்கள் திருட்டு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீஸாரிடம் விவசாயிகள் பலரும் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆலடிக்குமுளை, பாளமுத்தி ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது.

இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில், திருடர்களை பிடிக்க இரவு நேரங்களில் இளைஞர்கள், விவசாயிகள் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ஆத்திக்கோட்டையில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் உண்டியலை 2 பேர் உடைப்பதை அறிந்த கிராம மக்கள், அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு, பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு வந்த போலீஸார், 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (50) மற்றும் அவரது மகன் சூரியமூர்த்தி (23) என்பது தெரியவந்தது.

இவர்கள், அந்தக் கோயிலில் உண்டியலை உடைத்துத் திருடுவதற்காக கடந்த 2 நாட்களாக கோயிலைச் சுற்றி வந்தது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, தந்தை, மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு நாமக்கல் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவதால் அதுகுறித்தும் மின் மோட்டார், வயர் திருட்டு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x