அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!


சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர், வாசுதேவபுரம் பகுதியில் பிரபல தனியார் பள்ளி (பால் வித்தியா மந்திர்) செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து அசோக் நகர் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் தனியார் பள்ளிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌. நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதனால் அங்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன் இதே போன்று சென்னையில் பல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்குத் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து பள்ளிகள், பொதுமக்கள் ஓன்று கூடும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் காவல் துறை மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x