கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை வைத்திருந்த 2 கடைகளுக்கு சீல்: ஒருவர் கைது


கும்பகோணம்: கும்பகோணத்தில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலையை விற்பனைக்காக வைத்திருந்ததாக 2 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீஸார் இன்று சீல் வைத்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் கிருஷ்ணாபுரம் மற்றும் மேம்பாலம் இறக்கம், நீடாமங்கலம் சாலையில் உள்ள 2 கடைகளில் தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் எஸ்.சசிக்குமார், வி.முத்தையன், கோட்ட கலால் அலுவலர் அருள்மணி, நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் கரிகாலச் சோழன் மற்றும் போலீஸார், கிருஷ்ணாபுரத்தில் உள்ள கார்த்திகா மளிகைக் கடையை இன்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்தக் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 10.5 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அந்தக் கடைக்குச் சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து, மேம்பாலம் இறக்கம், நீடாமங்கலம் சாலையில் இந்தியன் ஸ்நாக்ஸ் கடையை ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள், அந்தக் கடையின் மாடியில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 250 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அந்தக் கடைக்கும் சீல் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்தக் கடையை நிர்வாகம் செய்து வந்த சாக்கோட்டையைச் சேர்ந்த குமார் (50) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x