பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக முன்னாள் நிர்வாகி கைது: உத்தராகண்ட் போலீஸார் அதிரடி


லக்னோ: பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த உத்தராகண்ட் பாஜக முன்னாள் நிர்வாகி முகேஷ் போரா, உத்தரபிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

உத்தராகண்டில் 36 வயது பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி முகேஷ் போரா மீது குற்றம் சாட்டப்பட்டது.

போரா தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். போராவின் நண்பர்களுடன் ‘இருக்க’ மறுத்ததால், பெல்வால் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டினார். போரா மற்றும் அவரது ஓட்டுநர் கமல் பெல்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, உத்தரகாண்ட் கூட்டுறவு பால் பண்ணை கூட்டமைப்பு நிர்வாகி பதவியில் இருந்து போரா நீக்கப்பட்டார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டன.

செப்டம்பர் 20 அன்று நைனிடால் போலீஸார் போராவின் சொத்துக்களை பறிமுதல் செய்தனர். மேலும், செப்டம்பர் 21ம் தேதி உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் போராவின் முன்ஜாமீனை நிராகரித்தது. போரா தப்பிக்க உதவிய நான்கு பேர் மீது உத்தரகாண்ட் காவல்துறை திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இருந்து முகேஷ் போரா கைது செய்யப்பட்டுள்ளார். “மேலும் விவரங்கள் செய்தியாளர் சந்திப்பில் பகிரப்படும்...” என்று ஹல்த்வானி வட்ட காவல்துறை அதிகாரி நிதின் லோஹானி கூறினார்.

x