உரிய ஆவணங்களின்றி திருப்பூர் வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 6 பேர் கைது


திருப்பூர்: உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்கு வேலைக்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 6 பேரை, திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தெற்கு போலீஸார் மற்றும் அதிவிரைவுப் படையினர் சோதனை மேற்கொண்டனர். வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் ஆவணங்களை பரிசோதித்தபோது, அங்கிருந்த 6 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களின் ஆவணங்களை சரிபார்த்ததில், வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு முதலிபாளையம் சிட்கோ பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள்போல் வேலையில் சேர்ந்துள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் வைத்து சோதித்ததில், உரிய ஆவணங்களின்றி இந்தியாவுக்குள் வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வங்கதேச நாட்டின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்த தன்வீர் (39), ரசிப் தவுன் (43), முகமது அஸ்லம் (41), முகமது அல் இஸ்லாம் (37), முகமது ராகுல் அமின் (30), சவுமுன் ஷேக் (38) ஆகியோர் என்பது தெரியவந்தது. வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ், 6 பேரையும் திருப்பூர் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.

x