சிபிஐ அதிகாரி போல பேசி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.52 லட்சம் மோசடி @ கோவை


கோவை: கோவையில் சிபிஐ அதிகாரி போல பேசி, தொழிலதிபர் மனைவியிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (52). ஜவுளித் தொழிலதிபர்.

இவரது மனைவி ஆர்த்தி(47)-யின் செல்போன் எண்ணுக்கு சமீபத்தில் ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், தாங்கள் மும்பையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்ற மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய ஆர்த்தி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

பின்னர், அந்நபர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி அதன் விவரங்களை கேட்டுள்ளனர். தொடர்ந்து, ஆர்த்தியின் வங்கிக்கணக்கில் உள்ள ரூ.52 லட்சத்தை, தாங்கள் கூறும் வங்கி எண்ணுக்கு பரிமாற்றம் செய்யுமாறும், விசாரணை முடிந்த பிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இதை உண்மை என நம்பிய ஆர்த்தி அந்நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ.52 லட்சத்தை பரிமாற்றம் செய்துள்ளார். அதன் பின்னர், அந்நபர்கள் இணைப்பை துண்டித்துவிட்டனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் நேற்று முன்தினம் ஆர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x