அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: உட்கட்சி பிரச்சினை காரணமா என போலீஸார் விசாரணை


தேனி சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீஸார்.

சின்னமனூர்: தேனி அருகேயுள்ள சின்னமனூரில் அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. உட்கட்சிப் பிரச்சினை காரணமாக அவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி. இவர் காந்தி சிலை அருகே உத்தமபாளையம் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது அலுவலகமும் வீடும் ஒரே வளாகத்தில் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரென பிச்சைக்கனி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். சப்தம் கேட்டு காவலாளி மாரியப்பன் கேட்டை திறந்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அந்த நபர்கள் தப்பி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முன்விரோதம் காரணமாக... இது தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் பிச்சைக்கனி புகார் அளித்தார். அதில், “சின்னமனூர் நகராட்சி அதிமுக கவுன் சிலர் உமாராணியின் மகன் வெங்கடேசன், தொடர்ந்து என்னிடம் பிரச்சினை செய்து வருகிறார். அவர்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால், வெங்கடேசனும், உமாராணியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இந்த முன்விரோதத்தால், என் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசிஇருக்கலாம்” என்று தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத், துணைக் கண்காணிப்பாளர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அரசியல் பிரச்சினையால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து சின்னமனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வந்து, பிச்சைக்கனிக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் வீட்டில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

x