புதுடெல்லி: ஷகர்பூரில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் குளியலறை மற்றும் படுக்கையறையில் ரகசிய கேமராக்களை வைத்து படம்பிடித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் பெண் ஒருவர், ஷகர்பூரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டு உரிமையாளரின் மகன் கரண் என்பவர் அதே கட்டிடத்தின் மற்றொரு வீட்டில் வசிக்கிறார்.
அந்தப் பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்லும் போதெல்லாம் சாவியை கரணிடம் கொடுத்து செல்வது வழக்கம். அதுபோல அவர் ஒருமுறை சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வந்தபோது தனது வீடு மற்றும் வாட்ஸ்அப் கணக்கில் சில அசாதாரண செயல்பாடுகளை கவனித்துள்ளார். அவரது வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சரிபார்த்தபோது, அந்தப் பட்டியலில் அடையாள தெரியாத மடிக்கணினி இணைப்பு இருப்பதைக் கண்டார்.
அதேபோல ஏதோ ஒன்று தன்னை கண்காணிப்பது போல அவர் சந்தேகப்பட ஆரம்பித்தார். இதனையடுத்து வீட்டில் ஏதேனும் கண்காணிப்பு சாதனங்கள் உள்ளதா எனத் தேடத் தொடங்கினார். அப்போது அவரின் குளியலறையின் பல்ப் ஹோல்டரில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இதனையடுத்து அவர் காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து மீண்டும் சோதனை செய்துள்ளார். அப்போது அப்பெண்ணின் படுக்கையறையின் பல்ப் ஹோல்டரில் மற்றொரு கேமரா பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், உரிமையாளர் மகன் கரண் தான் குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி அபூர்வா குப்தா, “அந்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்குச் சென்றபோது, அறையின் சாவியை கரணிடம் கொடுத்து சென்றுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கரண் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் மூன்று ஸ்பை கேமராக்களை வாங்கி, ஒன்றை அவரது படுக்கையறையிலும், ஒன்றை அவரது குளியலறையிலும் பொருத்தினார்.
இந்த கேமராக்களை ஆன்லைனில் இயக்க முடியாது. எனவே இதன் காட்சிகள் மெமரி கார்டுகளில் சேமிக்கப்படும். இதனால், அந்த பெண்ணின் அறையில் மின் பழுது இருப்பதாக கூறி கரண் பலமுறை அந்த பெண்ணிடம் சாவியை கேட்டு பதிவு செய்த வீடியோக்களை தனது லேப்டாப்பிற்கு மாற்றியுள்ளார். அவரிடம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை சேமிக்கப் பயன்படுத்திய ஸ்பை கேமரா ஒன்றும், இரண்டு லேப்டாப்களும் கைப்பற்றப்பட்டன. மாற்றுத்திறனாளியான 30 வயதான கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.