உதகையில் பிரபல தனியார் பள்ளிக்கு ஒரே நாளில் இருமுறை வெடிகுண்டு மிரட்டல்


உதகை: உதகையில் இயங்கி வரும் தனியார் ஆண்கள் பள்ளிக்கு வெளிநாட்டிலிருந்து இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஃபார்ன்ஹில் செல்லும் சாலையில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் தனியார் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் இன்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இன்று காலை இரண்டு முறை இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தர ராஜன் தலைமையில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை, வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வெளிநாட்டில் உள்ள அமைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது உறுதியானது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் குறித்து பெற்றோர்கள் அச்சமடைய தேவை இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x