திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வெடியங்காடு அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (64). வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் உசேன் (24 ). இவர் ஆர்.கே.பேட்டையில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை விவசாயி மகேந்திரன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியை மேற்கொள்ள கீரைசாத்து கிராமத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த போது, மகேந்திரனின் இருசக்கர வாகனம் மீது எதிரே ஆர்.கே. பேட்டைக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த உசேனின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரனும், உசேனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.கே.பேட்டை போலீஸார், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.