சென்னை: பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை, புதுக்கோட்டை உட்பட தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன், இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் ஆகிய மூவரும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான, ஹிஷாப் உத் தஹீரிர் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களின் நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய ஆறு பேரையும் போலீஸார் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை சைபர் கிரைம் போலீஸார் வசம் இருந்த இந்த வழக்கு, பின்னர் என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, இன்று சென்னை ஏழு கிணறில் ரகுமான் என்பவர் வீட்டிலும், நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ், சையது அலி ஆகியோர் வீடுகளிலும், ராயப்பேட்டையில் முகமது அலி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக, இன்று சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த இடங்களில் இன்று அதிகாலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.