மோசடி செய்த தனியார் லாக்கர் நிறுவனம்; கெடுபிடி காட்டிய நீதிமன்றம்... 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1.5 கிலோ நகைகள் மீட்பு!


சோதனை நடைபெற்ற இடம்

தனியார் லாக்கரில் காணாமல் போன 2.3 கிலோ தங்கம் மற்றும் பணம் தொடர்பான வழக்கை 12 வருடங்களுக்கு பின்பு நீதிமன்ற உத்தரவுபடி சென்னை காவல்துறை மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சவுகார்பேட்டை சேர்ந்த தர்மேந்திர கோத்தாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், "கடந்த 2012 ஆம் ஆண்டு தன் தாய்க்கு சீதனமாக தனது தந்தை அஜய் கொத்தாரி கொடுத்த 2.300 கிலோ தங்க நகைகளை, பாதுகாப்பு கருதி சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள தாதா செக்யூரிட்டி லாக்கர் என்ற தனியார் நிறுவனத்தில் கொடுத்தோம்.

உயர் நீதிமன்றம்

ஆனால், கடந்த 2012 ஆம் ஆண்டு பாதுகாப்பாக லாக்கரில் வைக்கப்பட்டிருந்த அந்த நகை மற்றும் பணம் திருடு போனதாக அந்நிறுவனத்தின் நிர்வாகிகளான மகேந்திர தாதா மற்றும் சுரேந்திர தாதா ஆகியோர் தங்களிடம் தெரிவித்ததனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மகேந்திர தாதா மற்றும் சுரேந்திர தாதா ஆகியோர் தங்களது நகைகளை தவறாக கையாண்டு மோசடி செய்ததாக யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது ஆறு மாதத்திற்குள் நகை மற்றும் பணத்தை திருப்பித் தருவதாக கையெழுத்திட்டு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், அதன் பிறகு கொஞ்சம் பணம், ஒரே ஒரு தங்க நெக்லஸ்சை மட்டும் கொடுத்து எனது தாயை ஏமாற்றி விட்டனர்” என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “பல வருடமாகியும் போலீஸார் இந்த வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தனது 60 வயதான தனது தாய் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து போலீஸார் அலைக்கழித்து வருவதால் மனரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன், இந்த நகையை தனது மகளுக்கு சீதனமாக கொடுக்கவுமிருந்தார். உடனடியாக இந்த திருட்டு வழக்கில் நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும். மேலும் இந்த வழக்கை உடனடியாக மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்ற வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 3 மாதத்திற்குள் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி, வழக்கு முடித்ததற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என பூக்கடை துணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள தனியார் லாக்கர் செக்யூரிட்டி நிறுவனத்தில் யானை கவுனி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கணக்கில் வராத 1.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்ததுடன், இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

மேலும், உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தனர். லாக்கரில் வைத்த 2.3 கிலோ தங்க நகை மற்றும் பணம் மாயமான சம்பவம் குறித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

x