நிலத்தகராறில் ஆத்திரமடைந்த விஜய் பட வில்லன் தனது பக்கத்து நிலத்துக்கார இளைஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நடிகரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியில் பல சின்னத்திரைத் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் புபேந்தர் சிங். பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர். தமிழில் நடிகர் விஜய் நடித்த ’பத்ரி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது நினைவிருக்கலாம். இவர்தான் தனது அண்டை நிலத்துக்காரரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் பகுதியில் இவருக்கு பண்ணைத் தோட்டம் உள்ளது. இதன் அருகே குர்தீப் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், நடிகர் புபேந்தர் சிங் தன் தோட்டத்தை சுற்றி முள்வேலி அமைக்க விரும்பி அதற்காக அங்கிருந்த மரங்களை வெட்ட முயன்றிருக்கிறார். இது தொடர்பாக புபேந்தர் மற்றும் குர்தீப் சிங் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருக்கட்டத்தில் இந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியிருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த நடிகர் புபேந்தர் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து குர்தீப் சிங் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுமட்டுமல்லாது, புபேந்தர் துப்பாக்கியால் சுட்டதில் 22 வயதாகும் குர்தீப்பின் மகன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குர்தீப், அவரது மற்றொரு மகன் அம்ரிக், மனைவி பீரா பாய் ஆகியோர் இந்த அடிதடி சம்பவத்தால் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக நடிகர் புபேந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் ஜியான் சிங், ஜீவன் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய நால்வரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...