ஸ்ரீரங்கம் ரவுடி கொலை வழக்கில் தமிழர் தேசம் கட்சி நிர்வாகி உள்பட 5 பேர் கைது


திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் (எ) சுரேஷ் (33), அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் சில காலம் வெளியூரில் தங்கி இருந்தார். பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்தார்.

இந்நிலையில் தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே உள்ள தேங்காய் குடோன் அருகே வந்தபோது, 3 இருச்சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சுரேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில், சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் கீழே விழுந்தனர். பின்னர், 5 பேர் கொண்டு கும்பல் சூழ்ந்து கொண்டு, சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது மனைவி ராகினிக்கும் காலில் வெட்டியுள்ளனர்.

இது குறித்து ஸ்ரீவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கீழவாசல் சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நந்தகுமார் (28), திருவானைக்காவல் சக்திநகரை சேர்ந்த ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரர் (36) (இருவரும் ரவுடிப் பட்டியலில் உள்ளனர்), ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோடு சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த விமல் என்கிற விமல்ராஜ் (24), ஸ்ரீரங்கம் தளவாய் தெரு கீழவாசல் பகுதியைச் சேர்ந்த சூர்யா (என்ற) சூரியபிரகாஷ் (31), ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெரு கீழவாசல் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (29) ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இவர்களிடமிருந்து ஐந்து அரிவாள்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் தப்பி ஓடிய ஸ்ரீரங்கம் ஜே.ஜே.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஹெல்மெட் பிரசாத் (19) என்ற இளைஞரை தேடி வருகின்றனர். விசாரணையில் தலைவெட்டி சந்துரு கொலைக்கு பழித்தீர்க்கவே ஆட்டுக்குட்டி சுரேஷை வெட்டி கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கைதான நந்தகுமார் ஸ்ரீரங்கம் பகுதி தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த இடங்களை அடையாளம் காட்டுவதற்காக இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், எஸ்ஐ ராஜகோபால், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகியோர் நேற்று மாலை 5 மணியளவில் ஜம்புவை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

ஸ்ரீரங்கம் மேலூரிலிருந்து முக்கொம்பு செல்லும் வழியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஊசிப்பாலம் எனும் இடத்தில் சென்ற போது, ஜம்பு போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ்ஐ ராஜகோபாலை வெட்டியும் உள்ளார். இதில் அவரது இடது புஜத்தில் வெட்டு விழுந்தது. இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் முன்கையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸார் தங்களை தற்காத்துக்கொள்ள வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரது முழங்கால் நோக்கி சுட்டனர். இதில் ஜம்பு இடது முழங்காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். அதையடுத்து போலீஸார் அவரை திருச்சி அரசு மருத்துவமனயில் அனுமதித்தனர். வெட்டுப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். தகவலறிந்து வந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி, காவலர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் காமினி கூறியதாவது: "ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கில் கைதான ஜம்பு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர் போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ஜம்புவை போலீஸார் தற்காப்புக்காக சுட்டுப் பிடித்தனர். ஜம்பு மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார்’ என்று காவல் ஆணையர் கூறினார்.

x