சிவகாசியில் திருடு போன 11 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸார்!


செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸார்

சிவகாசி: சிவகாசி நகர் காவல் நிலைய பகுதியில் திருடு போன 11 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவகாசி நகர் பகுதியில் செல்போன்கள் திருடுபோனதாக வந்த புகார்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் இதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளத்தில் செல்போன் விவரங்களை பதிவு செய்து, அதன் பயன்பாடு குறித்து கண்காணித்து வந்தனர்.

அதன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 8 மாதங்களில் திருடு போன 11 செல்போன்களை குற்றப்பிரிவு போலீஸார் மீட்டனர். இதையடுத்து, சிவகாசி டிஎஸ்பி-யான பாஸ்கர் மீட்கப்பட்ட செல்போன்களை இன்று அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி, உதவி ஆய்வாளர் வெற்றி முருகன் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.

இது குறித்து டிஎஸ்பி-யான பாஸ்கர் கூறுகையில், “பொதுமக்கள் தங்களது செல்போன் தொலைந்தாலோ அல்லது திருடு போனாலோ அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. திருடுபோன செல்போன் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

திருடுபோன செல்போன் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அல்லது இதற்கென உருவாக்கப்பட்ட www.ceir.gov.in என்ற இணையதளத்தில் செல்போன் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். திருட்டு செல்போன்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.

x