அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை: லஞ்ச ஒழிப்புத்துறை உறுதி


சென்னை: தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான இரு வழக்குகளில் இன்னும் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சென்னை தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், அதிமுக தென் சென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளருமான சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அதில், "வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடிக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் தி.நகர் முன்னாள் எம்எல்ஏ சத்யா உள்ளிட்டோருக்கு எதிராக பதியப்பட்டுள்ள இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த வழக்குளை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், "இந்த வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று பெறுகிறது. இன்னும் 4 மாதங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும்" என உறுதியளித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

x