செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்த நாகூரான் மகன் சரவணன்(39). இவர் கடந்த 10 ஆண்டுகளாக புலிப்பாக்கத்தில் இருந்து மகாலட்சுமி நகர் வரை தினமும் நடைப்பயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சரவணன் நேற்று எப்போதும் போலநடைப்பயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் சரவணன் மகாலட்சுமி நகரில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தாலுகா போலீஸார் சரவணனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. மோப்ப நாய் டைகர் புலிப்பாக்கம் அருகே காந்தளூர் பகுதியைச் சேர்ந்த பளையம் மகன் முத்து (42) என்பவரது வீட்டுக்கு சென்றது.
போலீஸார் முத்துவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும், நேற்று காலை வீட்டின் வழியாக நடந்து சென்ற சரவணனை பின் தொடர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து முத்துவை கைது செய்த போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.