சென்னையில் அடுத்த என்கவுன்ட்டர் - ரவுடி சீசிங் ராஜா சுட்டுக் கொலை


சென்னை: சென்னையில் மற்றொரு என்கவுன்ட்டர் அரங்கேறியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடியான ரவுடி சீசிங் ராஜா இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான கிழக்கு தாம்பரம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜா என்ற சீசிங் ராஜா (49) என்பவரும் தேடப்பட்டு வந்தார். தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாக இவரை, பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என தாம்பரம் காவல் ஆணையர் அறிவித்தார். அத்துடன் சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஓட்டி தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் பதுங்கி இருந்த சிசிங் ராஜா போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவரை ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ரவுடி சீசிங் ராஜாவை சென்னை நீலாங்காரை பகுதியில் உள்ள அக்கறை எஸ்கான் கோயில் பகுதியில் வைத்து போலீஸார் தற்காப்புக்காக என்கவுன்டர் செய்துள்ளனர். அப்போது, ரவுடி சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயெ உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x